×

அகஸ்தியர் அருவிக்கு மக்கள் படையெடுப்பு: கார், வேன்களில் குடும்பத்துடன் வந்து உற்சாக குளியல்

வி.கே.புரம்: குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் தண்ணீரின்றி வறண்டதால் அகஸ்தியர் அருவிக்கு சுற்றுலா பயணிகள் படையெடுத்த வண்ணம் உள்ளனர். நேற்று விடுமுறை தினம் என்பதால் கார், வேன்களில் குடும்பத்துடன் வந்து உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர். நெல்லை மாவட்டத்தில் புகழ்பெற்ற பாபநாசம் அகஸ்தியர் அருவியில், கோடை காலம் உட்பட ஆண்டு முழுவதும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதனால் இங்கு தமிழ்நாடு மட்டுமின்றி வெளிமாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து குளித்து விட்டு செல்வது வழக்கம். தற்போது கோடை காலம் என்பதாலும், வெயில் வெளுத்து வாங்கி வருவதாலும் குற்றாலத்தில் உள்ள அனைத்து அருவிகளிலும் தண்ணீரின்றி வறண்டு காணப்படுகிறது. இதனால் அங்கு சுற்றுலா பயணிகளின் கூட்டமின்றி வெறிச்சோடி காணப்படுகிறது. அதேவேளை பாபநாசம் அகஸ்தியர் அருவிக்கு சுற்றுலா பயணிகள் படையெடுத்த வண்ணம் உள்ளனர்.

இந்த அருவிக்கு உள்ளூர் மட்டுமின்றி வெளி மாவட்டம் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் பைக், கார், வேன்களில் குடும்பத்துடன் வந்து குளித்து விட்டு செல்கின்றனர். நேற்று விடுமுறை தினம் என்பதால் சுற்றுலா பயணிகள் குடும்பம், குடும்பமாக வந்து உற்சாகமாக நீராடி வெயிலின் தாக்கத்தில் இருந்து தங்களை பாதுகாத்து கொண்டனர். அகஸ்தியர் அருவிக்கு செல்லும் சுற்றுலா பயணிகளை பாபநாசம் வனசோதனைச் சாவடியில் வனச்சரகர் ஸ்டாலின் அறிவுறுத்தலின் படி வனத்துறையினர் தீவிர சோதனைக்கு பிறகே அனுமதி அளித்தனர். அவர்களில் சிலர் கொண்டு வந்த பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்தனர்.  மதுபாட்டில்களை பறிமுதல் செய்து அழித்தனர். அருவி பகுதியில் சுற்றுலா பயணிகள் சோப், ஷாம்பு போட்டு குளிக்காத வண்ணம் வனத்துறை ஊழியர்கள் பேச்சியப்பன் மற்றும் வனிதா பிரியா ஆகியோர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.


Tags : Aughtiar Flow , People Invasion to Agasthiyar Falls: Cars, vans come with family for enthusiastic bathing
× RELATED சந்திரகாச்சி அந்தியோதயா விரைவு ரயில் 7 மணி நேரம் தாமதம்